Sunday, September 26, 2010

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி
தமிழர்கள் விசேஷமாக வழிபடும் கடவுள், தமிழ்ப் பெண்ணை மணந்த மணமகன், அகத்திய முனிவருக்கு தமிழைக் கற்றுத் தந்த குரு என்று தமிழின் முதல் கடவுளாக முருகன் திகழ்கிறார். இந்த முருகனுக்கு உள்ள அறுபடைக் கோவில்களில் இரண்டாம் படை வீடாகக் கருதப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். இந்தத் திருக்கோவில் மட்டும் மற்ற ஐந்துபடை வீடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஆம். மற்றவைகள் எல்லாம் குன்றுகளின் மேல் அமைந்திருக்க இந்தக் கோவில் மட்டும் கடற்கரையில் அமைந்திருக்கிறது.
திருநெல்வேலியிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்த கோவில் அமைந்துள்ள திருச்செந்தூர், முன்பு சீரலை வாயில் என்று அழைக்கப்பட்டது. இது மிகவும் பழமையான திருத்தலமாகும். புறநானூற்றில் இது வெண்டலைப்புனரி அலைக்குடம் செந்தில் நெடுவேள் துறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூரனை சம்ஹரித்த பின்பு முருகன் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்று கந்த புராணம் தெரிவிக்கிறது. இந்த சிவலிங்கம் கோவிலின் மூலஸ்தானத்திற்குப் பின்புறமுள்ள அறையில் ஐந்து லிங்கங்களாக இருக்கிறது. இந்தக் கோவிலின் அமைப்பு ஓங்கார வடிவமுடையது. பிள்ளையார் சன்னதி, வள்ளிதேவசேனா சன்னதி, திருமால் சன்னதி, கம்பத்தடி இவைகளை எல்லாம் சேர்த்து ஒரு கோடு வரைந்தால் ஓம் என்கிற எழுத்து வரும் என்கிற பெரும் சிறப்புடையது இக்கோவில்.
தல வரலாறு
வீரமஹேந்திரபூரி என்ற நகரத்தை சூரபத்மன் என்ற அரக்கன் ஆண்டு வந்தான். அதிக தெய்வபக்தியுள்ள சூரபத்மனுக்கு, பெருமாள் திவ்ய சக்தியை வரமாக கொடுத்து அருள் புரிந்தார். இந்த சக்தியின் உதவியால் சூரபத்மன் மூன்று லோகத்தையும் ஆண்டு வந்தான். இதனால் அவனுடைய ஆணவம் அதிகரித்து மக்களை துன்புறுத்தத் தொடங்கினான். சூரபத்மன் அராஜகமான செயலைத் செய்யத் தொடங்கினான். இந்த அழிவுச்செயல்களை அழித்திட சுப்ரமணியர் தனது படை பரிவாரங்களுடன் சூரபத்மனுடன் போருக்குச் சென்றார். முதலில், சுப்ரமணியர் சூரபத்மனின் இளைய சகோதரனையும், மற்ற அரக்கர்களையும் அழித்தார். கடைசியில் சூரபத்மனுடன் போர் செய்தார். அவன் , பல வேடங்களில் தோன்றி சுப்ரமணியருக்கு விளையாட்டு காட்டினான். சூரபத்மன் சுப்ரமணியருடன் போர் செய்ய வரும் முதல்  நிகழ்வை அருளுக்கும் இருளுக்கும், கருணைக்கும் கொடுமைக்கும், அறிவுக்கும் மருளுக்கும் நடக்கும் சந்திப்பு என்று கந்தபுராணம் சொல்கிறது. சூரபத்மனின் ஒரு பாதி "நான்" எனும் அகங்காரம், மறுபாதி "எனது" எனும் மமகாரம். இந்த இரண்டையும் கொண்ட சூரபத்மன் மாமரமாக மாறி கடலுக்கடியில் தலைகீழாக நின்ற போதுதான் சுப்ரமணியரின் வேல் அம்மரத்தை இரண்டு பகுதியாகப் பிளந்தது. அந்த இரண்டு பாகங்களுக்குள் ஒன்று ஆண்மயிலாகவும், இன்னொன்று சேவலாகவும் தோன்றின. சுப்ரமணியர் ஆண்மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் வைத்துக் கொண்டார் என்றும் கந்த புராணம் சொல்கிறது. இந்த சூரசம்ஹாரம் நடைபெற்ற இடம்தான் திருச்செந்தூர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றது.
கோவில் அமைப்பு
இங்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு வருவது வழக்கமாகும். அதன் பிறகு பக்தர்கள்  அருகிலுள்ள நாழிக்கிணற்றுத் தண்ணீரிலும் நீராடுகிறார்கள். கடலோரத்தில் இருக்கும் இந்தக் கிணற்றுத் தண்ணீர் மட்டும் உப்பு சுவையில்லாமல் குடிப்பதற்கேற்ற சுவையான நீராக இருப்பது இங்குள்ள அதிசயமாகும்.  கடலில் குளித்து விட்டு இந்த நாழிக்கிணற்றில் குளித்தால் தீராத வியாதியும் குணமடையும் என்று இங்கு வரும் பக்தர்கள் நம்புகிறார்கள். ஏழு அடி ஆழமுடைய இந்த நாழிக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கிறது.சூரபத்மனோடு போரிட சுப்ரமணியரோடு வந்த படைவீரர்கள் தாகம் தணிப்பதற்காக அவர் கடலோரத்தில் இந்தக் கிணற்றைத் தோற்றுவித்ததால்தான் இந்தத் தண்ணீர் சுவையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது என்று வரலாறு சொல்கிறது. பக்தர்கள் இந்தக் கிணற்றை " ஸ்கந்த புஷ்கரணி" என்று அழைக்கிறார்கள்.
திருச்செந்தூர் கோயிலுக்குள்ளே நுழைந்தவுடன் தூண்டுகை விநாயகர் சன்னதியைப் பார்க்கலாம். அடுத்து அழகிய கலைச்சிற்பங்களைக் கொண்ட ஷண்முக மண்டபம் இந்தக் கோயிலுக்கு தனிச்சிறப்பைக் கொடுக்கிறது. இந்த மண்டபம் 120 அடி நீளத்தையும் 86அடி அகலத்தையும் கொண்டது. தொலைவிலிருந்து வரும் பக்தர்கள், 124 தூண்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் தங்கி விட்டுச் செல்கிறார்கள். தீராத வியாதி குணமடைய பல கோடி பக்தர்கள் திருச்செந்தூரை நம்பி நாடி வருகிறார்கள்.  இந்த மண்டபத்திற்கு அடுத்து இடும்பன் சன்னதியைப் பார்க்கலாம். ( அகஸ்திய முனிவரின் சிஷ்யனான இடும்பன் சுப்ரமணியரோடு கடுமையாக போர் செய்து தோற்று உயிர் நீத்தான். அதன் பிறகு அவருடைய அபார சக்தியை அறிந்து கொண்ட இடும்பன் சுப்ரமணியரை மனமுருகி பிரார்த்தனை செய்தான். இடும்பனின் பிரார்த்தனையை மெச்சிய சுப்ரமணியர் ஆறுபடை வீடுகளிலும் தன்னுடைய சன்னதிக்கு முன்னால் இடும்பனின் சன்னதி இடம்பெற வேண்டுமென்றும், தன்னை நாடி வரும் பக்தர்கள் முதலில் இடும்பனை தரிசிக்க வேண்டுமென்றும் வரத்தைக் கொடுத்தார்.) 
கோயிலின் பிரதான சன்னதியில் சுப்ரமணியர், பிரம்மச்சாரியாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நான்கு புஜங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கும் சுப்ரமணியரின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இடப்புறத்திலுள்ள ஒருகை இடுப்பிலும், மற்றொரு கையில் ஜபமாலையும், வலப்புறத்திலுள்ள ஒருகையில் வேலும், இன்னொரு கையில் புஷ்பமும் கொண்டு சுப்ரமணியர் காட்சி தருகிறார். இந்த சன்னதிக்கு அடுத்து இடது புறத்தில் சின்ன வாசலைக் கொண்ட துவாரபாலகா வீரமஹேந்திர சன்னதி இருக்கிறது. இந்தச் சன்னதியில் சற்று குனிந்து பார்த்தால் ஐந்து லிங்கங்களைக் காணலாம். இங்கு வரும் பக்தர்கள் தங்களுடைய பாவங்களை அழிக்கும் சக்தியைக் கொண்ட இந்த ஐந்து லிங்கங்களை வணங்கிச் செல்கிறார்கள். இந்த ஐந்து லிங்கங்களும் ஆகாயம், பூமி, தண்ணீர், காற்று, அக்னி ஆகிய ஐந்து சக்திகளைக் குறிக்கிறது. ஆறு முகங்கள், பன்னிரெண்டு கரங்களோடு இருபுறங்களிலும் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவயானையுடன் காட்சி தரும் ஷண்முகநாதரின் சன்னதியும் இத்திருத்தலத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சண்முகநாதரின் பின்புறத்தில் இடம் பெற்றுள்ள ஜகன்நாதர் லிங்கம் சூரியனையும், இடப்புறத்திலுள்ள ஜயந்திநாதர் லிங்கம் சந்திரனையும், வலப்புறத்தில் இடம்பெற்றுள்ள லிங்கம் ஆத்மாவைக் குறிப்பது இந்தக் கோயிலின் சிறப்பு அம்சமாகும். இந்த எட்டு லிங்கங்களை தரிசனம் செய்தவர்கள் எட்டு திக்குகளின் அபூர்வ சக்திகளைக் கொண்ட சிவபெருமானை தரிசனம் செய்ததற்கு சமமாகக் கருதப்படுகிறது. 
வழிபாடுகளும் சிறப்புக்களும்.
திருக்கோவில் தினசரி பூசை நேரங்கள்
  • திருக்கோவில்நடை திறப்பு - காலை 5 மணி. 
  • சுப்ரமணிய சுப்ரபாதம் -காலை 5.10 மணி. 
  • திருப்பள்ளியெழுச்சி தீபாராதனை -காலை 5.25 மணி. 
  • விஸ்வரூப தீபாராதனை -காலை 5.35 மணி. 
  • கொடிமர நமஸ்காரம்  -காலை 5.45 மணி.
  • உதயமார்த்தாண்ட அபிஷேகம் -காலை 6.15 மணி.
  • உதயமார்த்தாண்ட தீபாராதனை -காலை 7.00 மணி.
  • திரிகாலசந்தி ஒத்தக்கட்டளை -காலை 8.00 மணி.
  • தீபாராதனை மற்றும் ஸ்ரீபலி -காலை 8.45 மணி.
  • கலச பூசை -காலை 10.00 மணி.
  • உச்சிக்கால அபிஷேகம் -காலை 10.30 மணி.
  • உச்சிக்கால தீபாராதனை மற்றும் திருப்பலி- பகல்12.00 மணி.
  • சாயரட்சை தீபாராதனை -மாலை 5.15 மணி.
  • அர்த்த சாம அபிஷேகம் -இரவு 7.15 மணி.
  • அர்த்த சாம தீபாராதனை -இரவு 8.00 மணி.
  • ஏகாந்த தீபாராதனை,திருப்பலி -இரவு 8.15 மணி.
  • ரகசிய தீபாராதனை, மகாமண்டபம் திருகாப்பிடுதல், பள்ளியறை தீபாராதனை -இரவு 8.20 மணி.
  • திருக்கோவில் நடைசாத்துதல் -இரவு 9.00 மணி.
சிறப்புப் பூசைகள்
முருகன் கோவிலில் கொண்டாடப்படும் அனைத்து விழாக்களும் இங்கும் கொண்டாடப்பட்டு சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகிறது. இங்குதான் சுப்ரமணியர் சூரபத்மனை வதம் செய்ததாகச் சொல்லப்படுவதால் இங்கு கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விழா ஆறுநாட்கள் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் சுப்ரமணியர் சூரபத்மனை அழித்த நாள். எனவே ஐப்பசி மாதம் வளர்பிறைச் சஷ்டியைக் கடைசி நாளாகக் கொண்டு விழா நடைபெறுகிறது. இந்த நாளில்தான் விழா நடத்தப்பட வேண்டும் என்று கந்தோத்ஸ்தவ விதிப்படலம், கவுசிகப் பிரச்ன குமார தந்திரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியான சூரசம்ஹார நிகழ்வுக் காட்சி
முருகப் பெருமானுக்குரிய விரதங்கள் மூன்று வகையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரத்திலும் செவ்வாய்க்கிழமையன்று முருகப்பெருமானை வழிபடுவது வார விரதம். ஒவ்வொரு மாதத்திலும் வரும் கார்த்திகை நட்சத்திரத்திலும் மாத விரதம் அல்லது நட்சத்திர விரதம். ஐப்பசி மாதம் சஷ்டியன்று மேற்கொள்ளும் விரதம் ஆண்டு விரதமாகும். இந்த சஷ்டி விரதமிருப்பது மிகச்சிறந்த பலனைத் தரும் என்கிறார்கள்.
சிறப்புக்கள்
  • இக்கோவிலில் பன்னீர் இலையில்தான் விபூதி வழங்கப்படுகிறது. இதற்கு, சூரபத்மனை வதம் செய்த பின்பு தம்மை சூழ்ந்து நின்ற பரிவாரங்களுக்கு சுப்ரமணிய சுவாமி தன் பன்னிரு கைகளாலேயே விபூதி பிரசாதம் வழங்கினார். இந்தப் பன்னிரு கைகளின் நிலைதான் பன்னீர் இலைகள் இந்த இலை விபூதிகளின் மகத்துவம்  குறித்து ஆதிசங்கரரின் புஜங்க ஸ்தோத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
  • விஸ்வாமித்ர முனிவரும், ஆதி சங்கரரும் திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தந்த போது இருவரும் காசநோயால் அவதிப்பட்டனர். சுப்ரமணியர் தனது திருக்கரங்களால் அவர்களுக்கு பன்னீர் இலையில் விபூதியை கொடுத்து அருள் புரிந்தார் என்றும் சுப்ரமணியருடைய விபீதியின் சக்தியால் அவர்களுடைய வியாதி குணமடைந்தது. இதில் மகிழ்ந்த ஆதி சங்கரர் சுப்ரமணியரைப் போற்றிப் புகழ்ந்து சுப்ரமணியர் புஜங்கம் என்ற பாடலைப் பாடினார். 
  • நவகிரஹ தலங்களில் திருச்செந்தூரும் ஒரு தலமாகும் என்று சொல்லப்படுகிறது. இங்கு சூரபத்மனைக் கொன்றதால் தேவர்கள் பிரஸ்பதி (குரு பகவான்) சுப்ரமணியரின் திறமையை பாராட்டி மகிழ்ந்தார்கள். எனவே இந்தத் திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் குரு பகவானின் அருளையும் கூடுதலாகப் பெற்றுச் செல்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
  • திருச்செந்தூரில் கோவில் கொண்டுள்ள ஆறுமுகப் பெருமான் விக்கிரகம் தங்கத்தால் அமைந்தது என்பதைக் கேள்விப்பட்ட டச்சுக்காரர்கள் அதை நள்ளிரவில் திருடி மரக்கலம் மூலம் கடத்திச் செல்ல முயன்றனர். மரக்கலம் சிறிது தூரம் சென்றதும் சூறாவளிக் காற்று பலமாக விசியதுடன் கடலும் கொந்தளித்ததால் மரக்கலம் அபாயத்தில் சிக்கிக் கொண்டதால் மரக்கலத்திலிருந்த விக்கிரகத்தால்தான் இப்படி ஏற்படுகிறது என்பதை உணர்ந்த அவர்கள் அந்த விக்கிரகத்தை நடுக்கடலில் வீசி விட்டனர். அக்காலத்தில் தென்பாண்டிய நாட்டை மதுரை நாயக்க மன்னர்களின் பிரதிநிதியாக ஆண்டு வந்த வடமலையப்பன் பிள்ளை என்பவர் திருச்செந்தூர் முருகனின் பக்தர். இவர் விக்கிரகம் காணாமல் போன செய்தி கேட்டு துடித்துப் போனார். அன்றிரவு அவரின் கனவில் தோன்றியதுடன் கடலில் தான் இருக்குமிடத்தைத் தெரிவித்தார். வடம்லையப்பன் கடலுக்குச் சென்று அந்த விக்கிரகத்தை மீட்டு வந்தார் என்று திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் பாடப்படும் தமிழ்ப்பாடலில் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அறிவிக்கும் சிலா சாசனம் பிள்ளையன் மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கிறதாம்.
  • இந்தத் திருச்செந்தூர் சுப்ரமணியரிடம் பக்தி கொண்டவர்களில் ஆதிசங்கரர், நக்கீரர், கச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், குமரகுருபரர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், பகழிக்கூத்தர், வென்றிமாலைக் கவிராயர், கந்தசாமிப் புலவர், பாம்பன் சுவாமிகள், சேரந்தையப் புலவர் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
  • வீரபாண்டிய கட்டபொம்மன் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமியின் தீவிரமான பக்தர்களில் ஒருவர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
  • இக்கோவில் சுவரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு துவாரத்தில் காது வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் சப்தம் ஓம் என்பது போல் கேட்கிறது.
  • கோவிலின் அருகே கடற்பாறைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ள வள்ளி குகையில் வள்ளியை வழிபட நல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
  • இந்தப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் பனைமரங்களின் பதநீரில் தயாரிக்கப்படும் சுக்குக் கருப்பட்டி (சில்லுக் கருப்பட்டி) சிறப்புப் பொருளாக இங்குள்ள கடைகளில் கிடைக்கிறது.
பயண வசதி
தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் இந்த திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவிலுக்கு மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற ஊர்களிலிருந்து அதிகமான பேருந்து வசதிகளும், தென் மாவட்டத்திலிருக்கும் முக்கிய ஊர்களிலிருந்து குறிப்பிட்ட நேரங்களிலும் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து சில பேருந்துகளும் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு ரயில் பயண வசதியும் செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment